அவிசாவளை மாவட்ட பொது வைத்தியசாலையில் புதிய சத்திரசிகிச்சை கட்டிடத்தொகுதியை நிர்மாணிப்பதற்கான திட்டம் அலரி மாளிகையில் வைத்து பிரதமரிடம் கையளிக்கப்பட்டது.
மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் என்ற ரீதியில் பிரதமர் தினேஷ் குணவர்தன அவர்கள் வழங்கிய ஆலோசனையின் பிரகாரம், மேல்மாகாண ஆளுநர் திரு.ரொஷான் குணதிலக்கவின் பரிந்துரை ஏற்பாடுகளின் கீழ், பாராளுமன்ற உறுப்பினர் திரு.யதாமினி குணவர்தனவின் பிரேரணையின் பிரகாரம், 1500 மில்லியன் ரூபா செலவில் அறுவை சிகிச்சைக் கட்டிடத்தொகுதி நிர்மாணிக்கப்படவுள்ளது .
இந்த நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த பிரதமர் தினேஷ் குணவர்தன, அவர்கள் அவசர சந்தர்ப்பத்தில் இரண்டு மாகாண மக்களுக்கும் நன்மை பயக்கும் அவிசாவளை மாவட்ட பொது வைத்தியசாலையை அபிவிருத்தி செய்வதன் ஊடாக தேசிய வைத்தியசாலையின் நெரிசலை குறைக்க முடிவதாகக் கூறினார்.மேலும் கூறுகையில் மருத்துவமனை வளாகத்தில் கட்டிடத்தை நிர்மாணிப்தோடு அதற்கு அவசியமான , இயந்திரங்கள் மற்றும் நவீன தொழில்நுட்ப உபகரணங்களும் வழங்கப்பட வேண்டும் என்று கருத்துத் தெரிவித்தார். உபகரணங்களை இயக்கக்கூடிய பணியாளர்களை வழங்க முயற்சி எடுக்க வேண்டும் என்றும் பிரதமர் கூறினார். இல்லையெனில் பெரும் முதலீடு செய்து கட்டப்படும் கட்டிடங்களின் உண்மையான பெறுபேறுகளை பொதுமக்களுக்கு வழங்க முடியாத நிலை ஏற்படும் என்றும் பிரதமர் தெரிவித்தார். அதேபோன்று இந்த சத்திர சிகிச்சைக் கட்டிடத்தொகுதியை விரைவாக நிர்மாணித்து மக்கள் சேவைக்கு பயன்பட நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.
ஊடக அலகு.