கனடாவின் சர்வதேச அபிவிருத்திக்கான பிரதி அமைச்சருக்கும் பொது நிர்வாகச் செயலாளருக்கும் இடையிலான சந்திப்பு...
கனடாவின் சர்வதேச அபிவிருத்திக்கான பிரதி அமைச்சர் திரு. கிறிஸ்டோபர் மக்லெனன் (Christopher MacLennan ) இன்று முற்பகல் பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சில் அமைச்சின் செயலாளர் திரு.பிரதீப் யசரத்னவை சந்தித்தார்.
கனேடிய அரசாங்கத்தின் ஆதரவின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்ட வேலைத்திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பான தகவல்களைப் பெற்றுக்கொள்வதுடன் இலங்கையுடன் இணைந்து செயற்படக் கூடிய விதம் தொடர்பான தகவல்களைக் கண்டறிவது இந்த விஜயத்தின் நோக்கமாக அமைந்திருந்தது. மேலும் ஒரு பன்முக கலாச்சார நாடாக இலங்கையினுள் அரச கரும மொழிக் கொள்கை நடைமுறைப்படுத்தப்படும் விதம் தொடர்பில் மேலதிக தகவல்களை ஆய்வு செய்வது திரு. கிறிஸ்டோபர் மக்லெனன் அவர்களது எதிர்பார்ப்பாகவிருந்தது.
அதன்படி, இக்கொள்கையை நடைமுறைப்படுத்தும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ள பொதுநிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் திரு.பிரதீப் யசரத்ன அவர்களைச் சந்தித்த கனேடிய பிரதியமைச்சர், இந்த நாட்டில் நடைமுறையில் உள்ள மொழிக் கொள்கை தொடர்பிலான விடயங்கள் குறித்து கேட்டறிந்தார். அங்கு அமைச்சின் செயலாளர் திரு.பிரதீப் யசரத்ன உள்ளிட்ட உத்தியோகத்தர்கள் முன்னிலையில் எதிர்காலத்தில் ஒரு அமைச்சாக அமுல்படுத்த எதிர்பார்க்கும் வேலைத்திட்டங்கள் தொடர்பில் பிரதியமைச்சருக்கு விளக்கமளித்ததுடன், பன்முக கலாசார நாடாக மற்றும் இனங்களுக்கிடையிலான ஒத்துழைப்பையும் தொடர்பையும் வலுப்படுத்த எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் மற்றும் பொதுச் சேவையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள மொழித் தேவைகள் தொடர்பிலும் விளக்கமளிக்கப்பட்டது. நமது நாட்டில் மொழிப்பயன்பாட்டில் பல்வேறு சவால்கள் எழுந்துள்ளதாகத் தெரிவித்த பிரதியமைச்சர், இது தொடர்பில் இலங்கை மேற்கொண்டுள்ள அபிவிருத்தி நடவடிக்கைகள் குறித்து மிகவும் மகிழ்ச்சியடைவதாகவும் தெரிவித்தார்.
கனேடிய உயர்ஸ்தானிகர் திரு எரிக் வோல்ஷ், பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் மேலதிக செயலாளர் மகேஷ் கம்மன்பில, இலங்கை அபிவிருத்தி நிர்வாக நிறுவகத்தின் பணிப்பாளர் நாயகம் திரு.நாலக களுவெவ ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.