மொழிபெயர்ப்பாளர் பற்றாக்குறைக்கு விரைவான தீர்வொன்றைக் கண்டறிவதற்காக அகலவத்தையில் அமைந்துள்ள தேசிய மொழிக் கல்வி நிறுவனத்தை மொழிபெயர்ப்பாளர் பயிற்சி நிறுவனமாக மாற்றுங்கள்----உத்தியோகத்தர்களுக்கு பிரதமர் அறிவுறுத்தல்
சட்ட வரைஞர் திணைக்களத்தினுள்ளும் ஒட்டுமொத்த நீதித்துறைக் கட்டமைப்பினுள்ளும் நிலவும் தாமதத்திற்கு மொழி பெயர்ப்புச் சேவையில் நிலவும் உத்தியோகத்தர் பற்றாக்குறையே பிரதான காரணம் என பிரதமர் திரு. தினேஷ் குணவர்தன தெரிவிக்கிறார். 21.02.2024 ஆம் திகதிய சர்வதேச தாய்மொழி தினத்தை முன்னிட்டு பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் தேசிய மொழிகள் பிரிவின் முன்னேற்ற மீளாய்வில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டார். அங்கு மேலும் கருத்து தெரிவித்த பிரதமர், நீதிமன்றங்களில் உள்ள பல வழக்கு நடவடிக்கைகள் தாமதமாவதற்குக் காரணம் போதிய மற்றும் தரமான மொழிபெயர்ப்பாளர்கள், உரிய திணைக்களங்களில் இல்லாமையேயாகும்.
"ஓய்வு பெற்ற மொழிபெயர்ப்பாளர்களே இன்னும் இந்த நிறுவனங்களில் மொழிபெயர்ப்புப் பணிகளை ஆற்றி வருகின்றனர். அதற்குக் காரணம், அவர்களிடம் இந்த விசேட துறையில் நிபுணத்துவம் காணப்படுவதாகும். இதுவரை மொழிகளின் பயன்பாடு தொடர்பாக நாம் கடைப்பிடித்து வந்த முறைகளுக்குப் புறம்பாக புதிதாக சிந்திக்க வேண்டிய காலம் வந்திருக்கிறது.. அன்று திரு. பண்டாரநாயக்கா அரச கரும மொழிக் கொள்கையை நடைமுறைப்படுத்திய போது, இந்தக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதன் மூலம் இனங்களுக்கிடையிலான பொருளாதார ஒத்துழைப்பையும் வளர்க்க வழிவகை செய்ய முடியும் எனக் கூறினார். இதன் காரணமாக அமைச்சு என்ற வகையில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு ஆக்கப்பூர்வமான தீர்வுகளை வழங்க வேண்டும். அதற்காக விரைவில் அகலவத்தையில் அமைந்துள்ள தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தை மொழிபெயர்ப்பாளர்களைப் பயிற்றுவிக்கும் நிறுவனமாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கான அங்கீகாரத்தைப் பெற நாங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்."
மொழிபெயர்ப்புச் சேவையை மிகவும் ஈர்ப்புடைய சேவையாக மாற்றுவதற்கு சாதகமான மாற்றங்களை கூடிய விரைவில் ஏற்படுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்ட பிரதமர், அதற்கான முன்மொழிவுகளை சமர்ப்பிக்குமாறு அமைச்சின் உத்தியோகத்தர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
இந்த முன்னேற்ற மீளாய்வுச் சந்திப்பில், எதிர்வரும் ஜூலை 1-ம் திகதி அரச கரும மொழிகள் தினத்துடன் இணைந்து ஒரு வாரத்திற்கு நாடு முழுவதும் உள்ளடங்கும் வகையில் செயல்படுத்துவதற்கு உத்தேசித்துள்ள திட்டங்கள் தொடர்பில் பிரதமரிடம் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் யதாமினி குணவர்தன, அமைச்சின் செயலாளர் பிரதீப் யசரத்ன, தேசிய மொழிகள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி டி.கலன்சூரிய, அரசகரும மொழிகள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பிரின்ஸ் சேனாதீர உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.