பொது நிர்வாக அமைச்சு 2024 அபிவிருத்தி ஆண்டில் முதன்மைப் பொறுப்புகளை ஏற்க தயாராக இருக்க வேண்டும். கௌரவ பிரதமர் தினேஷ் குணவர்தன
பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு, 2024ஆம் ஆண்டினுள் நாடு முழுவதும் அமுல்படுத்தப்படும் அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பதற்கான முதன்மைப் பொறுப்பை ஏற்கத் தயாராக வேண்டும் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவிக்கிறார். பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் 2024ஆம் ஆண்டுக்கான முதலாவது முன்னேற்ற மீளாய்வுக் கூட்டத்தில் கலந்துகொண்ட போதே பிரதமர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டார். மேலும் உரையாற்றிய பிரதமர், 2024ஆம் ஆண்டு நாடு முழுவதும் முன்னெடுக்க உத்தேசிக்கப்பட்டுள்ள அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து அதிமேதகு ஜனாதிபதி இன்னும் சில தினங்களில் சுற்று நிருபங்களை வெளியிடவுள்ளார். மேற்படி அபிவிருத்திப் பணிகளை நாடு முழுவதும் அமுல்படுத்துவதற்கான முதன்மைப் பொறுப்பு, பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் கீழுள்ள மாவட்ட செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம உத்தியோகத்தர்கள் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களினால் கிராமிய மட்டம் வரை முன்னெடுக்கப்படவுள்ளது. ஆளுநர்கள், மாகாண பிரதம செயலாளர்கள், உள்ளூராட்சி ஆணையாளர்கள் மற்றும் உள்ளுராட்சி நிறுவனங்கள் வரை இந்த அபிவிருத்தித் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு மக்களின் வாழ்வில் சாதகமான மாற்றத்தை ஏற்படுத்த ஏதுவாக உள்ளது. மேற்படி அபிவிருத்தி நடவடிக்கைகளின் முதன்மைப் பொறுப்பை நிறைவேற்றுவதற்கு அமைச்சின் அனைத்து உத்தியோகத்தர்களும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமென பிரதமர் இதன்போது வலியுறுத்தினார்.
நிர்வாக சேவை மற்றும் உள்ளூராட்சி சேவையில் தற்போது வெற்றிடமாக உள்ள பதவிகளுக்கு தகுதி வாய்நத உத்தியோகத்தர்களை நியமிப்பதற்கு விரைவாக நடவடிக்கை எடுக்குமாறும் பிரதமர் அறிவுறுத்தினார்.
பல்நோக்கு அபிவிருத்தி திணைக்களத்தின் கீழ் ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட சுமார் இருபத்தைந்தாயிரம் பல்நோக்கு உதவியாளர்களை நிரந்தர வேவைக்கு உள்ளீர்ப்புச் செய்துள்ளதாகவும் மீதமுள்ள சுமார் நான்காயிரம் பேரினை தற்போது அவர்கள் இணைக்கப்பட்டுள்ள பிரதேச செயலகங்கள் மாவட்டச் செயலகங்கள் மற்றும் சம்பந்தப்பட்ட மாகாண சபைகளுக்கு நிரந்தரமாக்குவதற்கான முன்மொழிவு அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டு அனுமதியைப் பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் இங்கு தெரியவந்தது.
கடந்த காலத்தில் அமுல்படுத்தப்பட்ட ஈ கிராம உத்தியோகத்தர் திட்டத்தை 2014 ஆம் ஆண்டு மக்களின் வசதிக்காக பெறுபேறுகளை அடையக்கூடிய இலக்குடன் கூடிய திட்டமொன்றாக மாற்ற நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் உத்தியோகத்தர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் திரு.பிரதீப் யசடத் அவர்களினால், அரசாங்கத்தின் கொள்கைகளை முன்னெடுத்துச் செல்வதன் மூலம் வினைத்திறனான அரச சேவையை உருவாக்குவதற்கு 2024 ஆம் ஆண்டு அர்ப்பணிப்புடன் செயற்படுவதே தமது எதிர்பார்ப்பு எனவும் குழு உணர்வுடன் அதற்காக ஒன்றிணைந்து பணியாற்றத் தயாராகுமாறும் அனைத்து உத்தியோகத்தர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.இந்நிகழ்வில் அமைச்சின் சிரேஷ்ட உத்தியோகத்தர்கள் பலர் கலந்துகொண்டனர்